×

நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு செப்டம்பர் மாதத்தில் புத்தன் அணை குடிநீர் வினியோகம்: சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்த மேயர் தகவல்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களின் தேவைக்காக முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து அதன் பிறகு விநியோகம் செய்யப்படுகிறது. நகராட்சியாக இருந்தபோது 33 ஆயிரம் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு இந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு ஆளூர், தெங்கம்புதூர் பேரூராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டது. தற்போது நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை 4 லட்சமாக உயர்ந்து உள்ளது. இவர்களது குடிநீர் தேவையை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றிக்கொடுக்க வேண்டியுள்ளது.

இதற்காக அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.251 கோடியே 43 லட்சம் ெசலவில் புத்தன் அணை குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக புத்தன்அணையில் இருந்து 31.85 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சதகுழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர மாநகர பகுதிக்குள் 420 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 414 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறிய சிறிய பணிகள் செய்யவேண்டியது உள்ளது. மொத்தத்தில் 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. இந்த பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது ஒரு நபருக்கு தினமும் 135 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் அளவிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது புத்தன் அணை குடிநீர் திட்டத்திற்காக புத்தன் அணையில் 12 மீட்டர் சுற்றளவு கொண்ட நீர் உந்து நிலையம், 8 மீட்டர் சுற்றளவு கொண்ட நீர் எடுக்கும் கிணறு ஆகியவை புத்தன்அணையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு மின் இணைப்புகள் கொடுக்க பட்டுள்ளது. புத்தன் அணை குடிநீர் திட்டப்பணிக்காக கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் மேலும் அதிக கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனைதவிர மாநகர பகுதியில் ஏற்கனவே 12 மேல்நிலை நீர்தேக்கதொட்டிகள் உள்ளன. தற்போது கூடுதலாக 11 மேல்நிலை நீர்தேக்கதொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் புத்தன்அணையில் இருந்து கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிக்கரமாக முடிந்துள்ளது.

அடுத்த கட்டமாக இந்த மாத இறுதிக்கும் நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 23 மேல் நிலைய நீர் தேக்க தொட்டிகளில் 9 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு சோதனைமுறையில் கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து திறந்துவிடப்பட்டு சோதனை செய்யவுள்ளனர். இதற்கு அடுத்தகட்டமாக ஜூலை மாதம் இறுதிக்கும் அனைத்து மேல்நிலைநீர்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் சோதனை முறையில் திறந்துவிடப்பட்டு சோதனை செய்யப்படவுள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதியில் 23 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளும், 31 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் அமைந்துள்ளது. 23 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை மையமாக வைத்து 27 மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களுக்கு ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் இருந்து மண்டலம் வாரியாக தண்ணீர் சோதனை முறையில் திறந்துவிடப்படவுள்ளது.

மண்டல வாரியாக சோதனை முடிந்த உடன் நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள மக்களுக்கு புத்தன்அணை குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் 15 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு லாரிகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. இந்தநிலையில் மேயர் மகேஷ் இன்று காலை கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடந்து முடிந்துள்ள பணிகளை பார்வையிட்டார். 2 மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து மக்களுக்கு குடிநீர் வழங்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  பின்னர் மேயர் மகேஷ் கூறியது: புத்தன்அணை குடிநீர் திட்டப்பணி முடியும் தருவாயில் உள்ளது. புத்தன் அணையில் இருந்து கிருஷ்ணன்கோவில் வரை சோதனை முறையில் தண்ணீர் விட்டு வெற்றிக்கரமாக முடிந்துள்ளது.

அடுத்தகட்டமாக அனைத்து மேல்நிலைநீர்தேக்க தொட்டிகளுக்கும் சோதனை முறையில் தண்ணீர் ஏற்ற உள்ளோம். இதற்காக 145 எச்பி மோட்டார்கள் 4 உள்ளன. இந்த மோட்டார்கள் கொண்டு தண்ணீர் ஏற்றப்படும். கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும்பாலான வேலைகள் முடிந்து உள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து வேலைகளும் முடிந்து சோதனைகள் செய்யப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் கண்டிப்பாக மாநகர பகுதியில் புத்தன் அணை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், குடிநீர்வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கோபாலகிருஷ்ணன், உதவி நிர்வாக பொறியாளர்கள் முருகன், காந்தி, உதவி பொறியாளர் ஆஷிக் அகமத், மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர்கள் மேரிஜெனட் விஜிலா, சேகர், சுகாதார ஆய்வாளர் ராஜா, திமுக மாநகர செயலாளர் ஆனந்த், துணை செயலாளர் வேல்முருகன், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், தொண்டரணி ராஜன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

80 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு
நாகர்கோவில் நகராட்சியாக இருந்த போது 49 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. தற்போது புத்தன் அணை குடிநீர் திட்டப்பணியில் மேலும் பல வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் சேர்த்து பார்க்கும் போது மொத்தம் சுமார் 65 ஆயிரம் இணைப்புகள் வரும். தொடர்ந்து மேலும் 15 ஆயிரம் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளது. குடிநீர் விநியோகம் அளவீடு செய்யும் கருவி பொருத்தும் பணியும் நடக்கிறது. கிருஷ்ணன்கோவில் பகுதியில் மொத்தம 1500 வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் அளவீடு செய்யும் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. படிப்படியாக அனைத்து வீடுகளுக்கும் கருவி பொருத்தப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

The post நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு செப்டம்பர் மாதத்தில் புத்தன் அணை குடிநீர் வினியோகம்: சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்த மேயர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Buddhan Dam ,Nagargo ,Krishnanko Purification Station ,Nagarko ,Dinakaran ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...